கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்து ஈழத்தமிழர்கள் போராட்டம்
இலங்கை வீரர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால் சென்னையில் நடைபெற இருந்த ஆசிய தடகளப் போட்டிக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதைப் போல், பிரிட்டனில் சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றுள்ள இலங்கை அணிக்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதை வெளிப்படுத்தும் விதமாக இலங்கை வீரர்கள் பங்கேற்ற போட்டியின்போது, பிரிட்டன் கிரிக்கெட் மைதானங்களில் ஈழத் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் பிரிட்டனில் கார்டிப் மைதானத்தில் நடைபெற்றது.
இலங்கை அணி விளையாடியபோது, மைதானத்திற்கு அருகே நூற்றுக்கணக்கான ஈழத் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரிட்டனில் பல்வேறு தமிழ் அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன.
இலங்கை இறுதிப் போரில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாகவும், அதுகுறித்து நீதி விசாரணை நடத்தக் கோரியும் போராட்டாக்காரர்கள் முழக்கம் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, சில இளைஞர்கள் மைதானத்தின் நடுவே பதாகைகளுடன் நுழைந்து முழக்கமிட்டனர்.
இவ்வாறு மைதானத்திற்குள் நுழைந்து போராட்டம் நடத்தியது தொடர்பாக 8 தமிழர்களை வேல்ஸ் நகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதான வளாகத்தில், கடந்த 17-ம் தேதியும், இலங்கை அரசுக்கு எதிராக ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை தேவை, காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது ஆகியவற்றை வலியுறுத்தி லண்டனில் ஈழத் தமிழர்கள் நடத்தும் போராட்டம் வலுப்பெற்று வருகிறது என்றே கூறலாம்.
source :: puthiyathalaimurai
our thanks to :: puthiyathalaimurai
No comments:
Post a Comment